வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் பயனர்கள் குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் உரையாடல்களை பாதுகாப்பானதாக மாற்ற பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.

சமீபத்தில் லைஃப்ஹேக்கர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சாட்வாட்ச் என அழைக்கப்படும் இந்த செயலி ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம் குறித்த தகவல்களை வழங்குகிறது.

சாட்வாட்ச் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்றும் இரு கான்டாக்ட்கள் சாட் செய்யும் தகவல்களை தெரிவிக்கும்.

நண்பர்கள், குடும்பத்தார் அல்லது ஊழியர்களின் வாட்ஸ்அப் நடவடிக்கையை சாட்வாட்ச் மூலம் அறிந்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களின் லாஸ்ட் சீன் அம்சத்தை மறைத்து வைத்திருந்தாலும் இந்த செயலி வேலை செய்யும் என சாட்வாட்ச் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உங்களுக்கு அறிமுகமானவர்களின் சாட் விவரங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் வசதியும் இந்த செயலியில் உள்ளதாக சாட்வாட்ச் நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க இந்த செயலி 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தி நெக்ஸ்ட் வெப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆன்ட்ராய்டு பயன்படுத்துவோர் ரூ.140 செலுத்தி இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டு விட்டது. சாட்வாட்ச் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இந்த செயலியின் வெப் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.