கோடைகாலத்தில் உண்டாகும் சரும பிரச்சினைகள்

கோடைகாலம் வந்தாலே வெயில் சுட்டெரிக்கும். அதனால் வியர்த்து கொட்டும். இதையொட்டி உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதுடன், சொரி, சிரங்கு, தேமல், படர் தாமரை, கொப்பளங்கள், அம்மை போன்ற தோல் நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர வெயிலின் தாக்கத்தால் தோல் வறண்டு சாதாரணமாகவே அரிப்பு உண்டாகும்.

பொதுவாக கோடைகாலத்தில் தோல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பல்வேறு விதமான சரும பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். அத்தகைய சரும பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது? அவற்றில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை தோல் நோய் சிறப்பு நல மருத்துவர் ரம்யா கூறியதாவது:-

சரும பாதிப்புகள்

வெயில் சம்பந்தமான சரும பாதிப்புகளுக்கு ‘போட்டோ டெர்மடைடிஸ்‘ என்று பெயர். வெயில் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு வெயில்படும் உடலின் அனைத்து பாகங்களிலும் அரிப்பு, தடிப்பு உண்டாகும். அதிக வியர்வையால் சிலருக்கு கொப்பளங்கள் வர வாய்ப்பு உண்டு. அதேபோல் அக்குள், தொடையின் இடுக்கு ஆகிய பகுதியில் தேமல், ‘ரிங் வார்ம்‘ என்னும் படர் தாமரை வந்து அரிப்பு உண்டாகும்.

சின்னம்மை

‘சிக்கன் பாக்ஸ்‘ எனப்படும் சின்னம்மை நோய் ஒரு வித வைரஸ் கிருமிகளால் உண்டாகும். இது காற்றில் பரவும் தன்மை கொண்டது. வெயில் காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைந்து போவதால் இந்த வைரஸ் கிருமிகள் எளிதில் பரவுவதற்கு ஏதுவான சூழல் ஏற்படுகிறது. சின்னம்மை தாக்குதலால் உடலில் கொப்பளங்கள் தோன்றும். 10 முதல் 14 நாட்கள் வரையில் இதன் தாக்கம் இருக்கும்.

அம்மை தாக்கியவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இந்தோயின் தாக்குதல் தீவிரமடைந்தால் மூளை, நுரையீரலை வைரஸ் கிருமிகள் தாக் கக்கூடும். அதனால் இதற்கு சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. கவனக்குறைவாக இருந்தால் உயிரிழப்பு கூட நேரிட வாய்ப்பு உண்டு. அம்மை தாக்கியவர்கள் உணவில் காரத்தை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இளநீர், பழங்கள் அதிகளவில் உண்பது நல்லது.

தவிர்க்கும் வழிமுறைகள்

பொதுவாக கோடைகால சரும பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை குறைக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும் காலை, மாலை நேரங்களில் வெளியில் செல்லலாம். பகல் நேரத்தில் வெயிலில் செல்பவர்கள் குடை பிடித்து கொள்வதும், தலையில் தொப்பி அணிந்து கொள்வதும் நல்லது.

வெயிலின் தாக்கத்தில் முகம் கருத்து போகாமல் இருக்க ‘சன்சேவர் கிரீம்‘ தடவலாம். நாள்தோறும் 2 முறை குளிப்பது நல்லது. கதர், பருத்தி ஆடைகளை அணிவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சோப்பு, துண்டு ஆகியவற்றை தனித்தனியாக வைத்து பயன்படுத்த வேண்டும்.

சொரி, சிரங்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு சரும பாதிப்பால் சிறிய கொப்பளங்கள் தோன்றக்கூடும். அதனால் சர்க்கரையின் அளவை மிகச்சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். தோலில் கொப்பளங்கள் தோன்றினால் தாமதிக்காமல் அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பூச்சி கடித்தால் உடல் முழுவதும் அரிப்பு தோன்றக்கூடும். அதேபோல் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஒட்டுண்ணிகளால் சொரி, சிரங்கு ஏற்படுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு சொரி, சிரங்கு வந்தால் அடுத்தடுத்து என அனைவருக்கும் வந்து விடும். அதனால் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அனைவரும் சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.

காரணங்கள்

பொதுவாக நடைமுறை வாழ்வில் சரும பிரச்சினைகள் வருவதற்கு 30 சதவீத காரணங்கள் தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 70 சதவீத காரணங்கள் கண்டறியப்படவில்லை. சாதாரணமாக, பூச்சிக்கடி, ஒவ்வாமை, மருந்து, மாத்திரைகளாலும், தைராய்டு சுரபியின் செயல்பாட்டில் மாறுபாடு, சொத்தைப்பல், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு போன்ற கண்டறியப்பட்ட காரணங்கள் உண்டு.

இதுதவிர வாசனை திரவியங்கள், உடுத்தும் உடைகள், பெண்கள் நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் பொட்டு, ஜிகினா ரக சேலைகள், உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் நிறமிகள் என நூற்றுக்கணக்கான காரணங்களாலும் சரும பிரச்சினைகள் வருவதுண்டு. பொதுவாக சரும பிரச்சினைகள் வந்தால் எதனால் வருகிறது என்பதை கண்டறிய வேண்டும். அதை கண்டறிந்து தவிர்த்து விட்டால் முடிந்தவரை சரும பிரச்சினைகள் வராது.

பரிசோதனை

சரும பிரச்சினைகளை கண்டறிய முதலில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் எதனால் தோலில் அரிப்பு, தடிப்பு வருகிறது என்பதை கண்டறிய முடியும். அதற்கேற்றவாறு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அரிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது என்று கடைகளில் மாத்திரைகளை வாங்கி உண்ணக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.