ஆறு வகை தியானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

தியானம் என்பது சுவாசத்திலேயே கவனத்தைச் செலுத்தும் எளிய செயலாகும். தியானம் செய்வதென்பது மிகக் கடினமான வேலையாக இருக்கக்கூடாது. மனம் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கக்கூடியது. ஒரு குறிப்பிட்ட போக்கில் மனதைச் செலுத்துவது கடினம் தான். தியானத்தின் மூலம், மனதை நமது நண்பனாக்கி, நாம் விரும்பும் குறிப்பிட்ட விதத்தில் செயல்படும்படி அதனைக் கட்டுப்படுத்துகிறோம்.

தொடர்ந்து தியானம் பழகும்போது, விழிப்புணர்வு அமைதி நிலையை அடைந்து, விரிவடையும் சாத்தியம் ஏற்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றுடனும் இணைந்திருக்கும் உணர்வே தியானம்.

ஆனால், தொடக்க நிலையில் உள்ளவர்களும், முதல் முறை தியானம் பழகுபவர்களும், பல்வேறு தியான வகைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவற்றில் அவர்களுக்கு ஏற்ற ஒன்றைப் பின்பற்றிப் பார்ப்பது நல்லது. எல்லா வகை தியானமும், பிரபஞ்சத்துடன் இணைந்திருப்பது, உலகத்தின்பால் அன்பை, கருணையை அதிகரிப்பது ஆகிய நோக்கத்துடனே வடிவமைக்கப்பட்டுள்ளது. தியானம் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும் உறவுகளையும் மேம்படுத்தும், மன அழுத்தத்தையும், மனச் சோர்வையும் கூடப் போக்க உதவும்.

பல்வேறு வகை தியான முறைகள் உள்ளன. அவற்றில் சில பற்றி இங்கு காண்போம்.
கவனம் செலுத்தும் தியானம் (FOCUSED MEDITATION)

தொடக்க நிலைப் பழகுநர்கள் மனதைச் செலுத்தும் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். இவர்களுக்கு கவனம் செலுத்தும் தியானம் மிகவும் ஏற்றது.

இந்தத் தியான முறையில், ஐந்து புலன்களில் ஏதேனும் ஒன்றின்மீது மனதைச் செலுத்த வேண்டும். பொதுவாக சுவாசத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். சுவாசத்தைக் கவனிக்க வேண்டும், உடல் முழுதும் சுவாசம் எப்படி நகர்ந்து எப்படிச் செல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒலி அல்லது ஸ்பரிசத்தில் மனதைச் செலுத்தும் முறையிலும் இந்த வகைத் தியானத்தைப் பழகலாம்.
ஆன்மீகத் தியானம் (SPIRITUAL MEDITATION)

ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர்களுக்கு இது சிறந்த முறை. ஆன்மீகத் தியானமானது, ஒருவர் ஆன்மீகத்தில் மென்மேலும் முன்னேறவும், ஆழ்ந்து செல்லவும், தன்னைச் சுற்றியுள்ள அனைத்துடனும் கருணை தோய்ந்த உறவை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது. இந்தத் தியானம் பழகுபவர்கள், ஐந்து புலன்களில் ஒன்றில் மனதைச் செலுத்தி, தங்களைச் சுற்றியுள்ள அமைதியை உணர்ந்து அதில் ஐக்கியமாவார்கள். இதன் மூலம் உன்னதமான உணர்வைப் பெறுவார்கள். அவர்களின் இயல்பைப் பிரதிபலிக்கும் மிகச்சிறந்த ஊடகமாக மௌனமே திகழும்.

ஆன்மீகத் தியானம் செய்பவர்கள், வாழ்வின் அர்த்தம் குறித்தும் இருப்பு குறித்தும் உள்ள கேள்விகளுக்கு பதில் தேடுவார்கள். இது மனதைக் சுத்தபடுத்தி, மனதின் வலிமையையும் அதிகரிக்க உதவுகிறது.

மந்திரத் தியானம் (MANTRA MEDITATION)

ஒரே விதமான ஒலியை (மந்திரம்) மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் தியான முறை. மந்திரங்கள் என்பவை குறிப்பிட்ட நல்லாற்றளைக் கொண்ட ஒலிகள். இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் நபரின் ஒவ்வொரு செல்லிலும் அதன் அதிர்வு பாதிப்பை ஏற்படுத்தும். மந்திரத்தை மனனம் செய்து உச்சரிப்பதால் மன அழுத்தமும் குறையும். மந்திரத்தை ஜபம் செய்வதன் மூலம் ஒருவர் தன்னையே பாதுகாத்துக்கொள்கிறார். அதற்கு பழகும் நபர், மந்திரத்தில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், அத்துடன் ஐக்கியமாகிக் கலக்க வேண்டும். மந்திரத்தில் மனதை எவ்வளவு ஆழமாகச் செலுத்துகிறாரோ, அந்த அளவுக்கு அவரது மனம் உயர் நிலையை அடையும்.

மந்திரத் தியானத்தில், மந்திரத்தின் சரியான உச்சரிப்பு மிக அவசியம். மந்திரத்தின் பெரும்பான்மையான பலன், அதை எப்படி சரியாக உச்சரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. அனுபவம் வாய்ந்த பழகுநர்களுக்கு மந்திரங்கள் ஆழ் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு அல்லது செயல்பட்டுக்கொண்டு இருக்கும்.
ஆழ்நிலைத் தியானம் (TRANSCENDENTAL MEDITATION)

ஆழ்நிலைத் தியானம் என்பதை இந்திய ஆன்மீக ஞானி மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தொடக்க நிலை தியானம் பழகும் நபர்களுக்கும் தொடர்ந்து தியானம் பழக நினைப்பவர்களுக்கும் இது மிகவும் ஏற்றது.

இந்தத் தியானத்திலும், மந்திர உச்சரிப்பு, சுவாசத்தில் கவனத்தைச் செலுத்துதல் போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இது ஒவ்வொரு நபருக்கும் பிறந்த ஆண்டைப் பொறுத்து தனிப்பட்ட மந்திரங்கள் பரிந்துரைக்கப்படும். சில சமயம் ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்தும் மந்திரங்கள் கொடுக்கப்படும்.

ஆழ்நிலைத் தியானத்தை தொடர்ந்து செய்துவந்தால், மூளையில் மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகரிக்கிறது, தொடர்ந்து செய்யும்போது அதே அனுபவம் நாள் முழுதும் நல்ல விளைவை நிலையாக ஏற்படுத்தவும் செய்கிறது.
இயக்கத் தியானம் (MOVEMENT MEDITATION)

உட்கார்ந்து தியானம் செய்வதில் ஆர்வமில்லாதவர்கள் இயக்கத் தியானத்தை முயற்சிக்கலாம்.

இதன் பெயருக்கேற்ப, இந்தத் தியானம் உடல் அசைவுகள் சம்பந்தப்பட்டது. இதில் பல வகை அசைவுகள் உள்ளன. பல மடங்களில் உட்கார்ந்து செய்யும் தியான முறைகளுக்கு மாற்றாக இந்த வகை தியானம் கற்றுத்தரப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு வகையில் உடல் அசைவுகள் இடம்பெறும். நீங்கள் பரபரப்பாக ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போதும் மனம் எங்கெங்கோ அலைபாய்ந்து திரியக்கூடியது. இயக்கத் தியானம், இந்தக் உலகின் இயல்பைப் பற்றியும், தெய்வீகத் தன்மையைப் பற்றியும் புரிந்துகொள்ள ஒருவருக்கு உதவுகிறது.
மனந்தெளிநிலைத் தியானம் (MINDFULNESS MEDITATION)

மனந்தெளிநிலைத் தியானம், புத்தமதக் கோட்பாடுகளிலிருந்து உருவானது. இந்தத் தியானம் செய்பவர், நிகழ் தருணத்தில் வாழும் கலையைப் பயில்வார். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், ஒருவருக்கு மன அழுத்தமும், கலக்கமும் குறைந்து, உலகை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வாய்க்கும்.

தனிப்பட்ட பயிற்சி அழித்துக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இல்லாதவர்களும் இந்தத் தியான முறையைப் பயிற்சி செய்யலாம்.

தியானத்தை சொற்களால் விவரிக்க முடியாது. ஒருவர் தானே முயற்சி செய்து பயிற்சி செய்து பார்த்தே அதன் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர முடியும். தியானம் என்பது மதமோ, தத்துவமோ, வாழ்க்கை முறையோ அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ அல்ல. தன்னை உணர்ந்திருப்பது மற்றும் தன உணர்வுகளை உணர்ந்திருப்பதே தியானம். இது சிரமமற்ற ஒரு நிலை மாற்றம். தொடர்ந்து தியானம் பயிற்சி செய்யும்போது படைப்புத்திறனும், உடல்நலமும், மன அமைதியும் மேம்படும். மகிழ்வும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.