ரஜினி கட்சி தொடங்கும் முடிவைப் பின்போட்டார்

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டி கொள்கைகளையும் அறிவித்து செயல்பட்டு வருகிறார்.

நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு ஒவ்வொரு நடவடிக்கையையும் மெல்ல மெல்ல தான் எடுத்து வருகிறார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை அவர் ஒருங்கிணைத்தார்.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு அதில் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 32 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால் அடுத்து ரஜினி தனது கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தபோது ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று தகவல் வெளியானது. இதற்காக மிகப்பெரிய மாநாடு ஒன்றையும் ரஜினி நடத்துவார் என்று கூறப்பட்டது.

Chennai: Tamil actor Rajinikanth addresses his fans on the fourth day of a six-day-long photo session in Chennai, on Friday. Rajinikanth is expected to announce his decision to join politics on December 31. PTI Photo by R Senthil Kumar (PTI12_29_2017_000131B)

ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை. இதைத் தொடர்ந்து மே மாதம் ரஜினி தீவிர அரசியலுக்கு வந்து விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மே மாதமும் ரஜினி புதிய கட்சி அறிவிப்பை வெளியிட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக ரஜினியின் அரசியல் வருகை தள்ளிபோய் உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, நியூட்ரினோ பிரச்சினை, மீத்தேன் வாயு பிரச்சினை, ஹட்ரோகார்பன் விவகாரம் ஆகியவை ஓசையின்றி நடந்தபடி உள்ளன.

இவை அனைத்துக்கும் உச்சமாக காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை கடந்த 2 வாரங்களாக அனல் பறக்கும் வகையில் உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ரஜினி வெளியிட்ட கருத்தும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய கட்சி பெயர் அறிவிப்பு மாநாட்டை எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது பேசிய நிர்வாகிகள் அனைவரும் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருவதால் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உகந்த சூழ்நிலை இல்லை. எனவே கட்சி தொடக்க விழாவை சில மாதங்களுக்கு தள்ளி வைக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

இந்த யோசனையை ரஜினி ஏற்றுக் கொண்டார். இதனால் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு மேலும் தள்ளி போய் உள்ளது.

தமிழ்நாட்டில் போராட்டங்கள் ஓய்ந்து சுமூகமான சூழ்நிலை உருவாகும்போது கட்சி அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். எனவே ரஜினி இப்போதைக்கு தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.